Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சென்னை டெஸ்ட் போட்டி- முதல் நாளில் ஆஸி அபாரம் - 316/7!!

Posted by:
Updated: Friday, February 22, 2013, 16:48 [IST]
 

சென்னை டெஸ்ட் போட்டி- முதல் நாளில் ஆஸி அபாரம் - 316/7!!
 

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தொடக்கத்தில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி பின்னர் அதிரடியாக ஆடி ஆட்ட நேர முடிவில் 316 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா வருகை தந்துள்ள கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது.

இன்றைய போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கோவனும் வார்னரும் களமிறங்கினர். இருவரும் மிக நிதானமாக ரன்கள் எடுத்து வந்தனர். ஆஸ்திரேலிய அணி 64 ரன்களை எடுத்திருந்த நிலையில் கோவன் ஆட்டமிழந்தார். அவர் 45 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் களத்தில் இருந்த வார்னருடன் ஹியூஸ் கை கோர்த்தார். ஆனால் ஹியூஸ் சிறிது நேரம் கூட நிற்கவில்லை. அந்த அணி 72 ரன்களை எட்டிய நிலையில் அஸ்வின் பந்து அவுட் ஆனார். 15 பந்துகளை சந்தித்த ஹியூஸ் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். களத்தில் தொடர்ந்து நின்ற வார்னருடன் வாட்சன் இணைந்தார். இருவரும் இணைந்து 50 ரன்கள் வரை சேர்த்தனர்.

34.4 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 126 ரன்களை எடுத்திருந்த நிலையில் வாட்சன் அவுட் ஆனார். வாட்சனைத் தொடர்ந்து கேப்டன் கிளார்க் களத்துக்கு வந்தார். கிளார்க்கும் வார்னரும் இணைந்து கூடுதலாக 5 ரன்களை எடுத்த நிலையில் வார்னர் அவுட் ஆகி வெளியேறினார். அவர் மொத்தம் 93 பந்துகளை சந்தித்து 59 ரன்களை சேர்த்திருந்தார். இதைத் தொடர்ந்து கிளார்க்குடன் வேட் கை கோர்த்தார். அவர் நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. 35 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்து அவுட் ஆனார். 47 வது ஓவரில் ஆஸ்திரேலியா அணியால் 153 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆஸ்திரேலியா அணியின் 5 விக்கெட்டுகளை அஸ்வின்தான் சாய்த்து அசத்தினார். 47-வது ஓவரின் போது அஸ்வின் 18 ஓவர்களை வீசி 42 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

பின்னர் கிளார்க்குடன் இணைந்த ஹென்ரிக்ஸ் அபாரமாக ஆடினர். இருவரும் இணைந்து அதிரடியாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். இருவரையும் பிரிக்க இந்திய அணி வீரர்கள் படாதபாடு பட்டனர். இருப்பினும் இந்த இணை ஆஸ்திரேலியா அணியை 300 ரன்களைக் கடந்து நிறுத்தியது. 304 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்த போது அஸ்வின் பந்தில் ஹென்ரிக்ஸ் எல்.பி.டபிள்யூ அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ஸ்டார்க்கை ஜடேஜா அவுட் ஆக்கினார். இன்றைய ஆட்ட நேர முடிவில் 316 ரன்களைக் குவித்திருந்தது ஆஸ்திரேலிய அணி.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் 6 விக்கெட்டுகளை தமிழக வீரர் அஸ்வின்தான் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Friday, February 22, 2013, 9:38 [IST]
English summary
Australia won the toss and elected to bat first against India in the first Test here at the MA Chidambaram Stadium on Friday.
கருத்தை எழுதுங்கள்