Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சென்னை டெஸ்ட் போட்டி: வெற்றியை நோக்கி இந்தியா! இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து ஆஸி. தப்பியது!

Posted by:
Updated: Monday, February 25, 2013, 17:47 [IST]
 

சென்னை டெஸ்ட் போட்டி: வெற்றியை நோக்கி இந்தியா! இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து ஆஸி. தப்பியது!
 

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா தோல்வியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து அந்த அணி தப்பியிருக்கிறது.

சென்னையில் ஆஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 380 ரன்களைக் குவித்தது. பின்னர் இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க வீரர்கள் சோபிக்காத நிலையில் நேற்று முன் தினம் ஆட்ட நேர முடிவில் டெண்டுல்கர் 71 ரன்களுடன் கோஹ்லி 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 3-ம் நாள் ஆட்டத்தை டெண்டுல்கரும் கோஹ்லியும் விளையாடத் தொடங்கினர். தம் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.. ஆனால் 81-வது ரன்களை எடுத்திருந்த சச்சின் ஆஸ்திரேலியாவின் லியான் வீசிய பந்தில் அவுட் ஆனார்.

பின்னர் கோஹ்லியுடன் கேப்டன் டோணி இணைந்து அபாரமாக விளையாடினர். கோஹ்லி சதமடித்து 107 ரன்களில் ஆட்டமிழந்தார். டோணியுடன் ஜடேஜா இணைந்தார். ஜடேஜா 16 ரன்களையும் அஸ்வின் 3 ரன்களையும் எடுத்து அவுட் ஆயினர். ஆனால் கோஹ்லியைப் போலவே டோணியும் சதமடித்து அசத்தினார். அப்போது டெஸ்ட் போட்டிகளில் டோணி 4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். ஹர்பஜன்சிங் 11 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக புவனேஷ்குமார் சேர்ந்து கொண்டார். டோணியின் அதிரடி தொடர 230 பந்துகளை எதிர்கொண்டு 200 ரன்களை குவித்தார் டோணி. இந்திய அணியும் 500 ரன்களைக் கடந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 515 ரன்களை எடுத்திருந்தது. டோணி 206 ரன்களுடனும் புவனேஷ்குமார் 16 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. கேப்டன் டோணி 224 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 546 ரன்களை எடுத்திருந்தது. புவனேஷ்குமாருடன் இஷாந்த் சர்மா இணைந்தார். இந்திய அணி 572 ரன்களை எடுத்த நிலையில் புவனேஷ்குமார் அவுட் ஆக இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியாவை விட 192 ரன்கள் முன்னிலை வகித்தது இந்திய அணி.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தமது 2- வது இன்னிங்ஸை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணியின் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் 2வது இன்னிங்ஸிலும் வேட்டையைத் தொடர்ந்தார். ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் நீண்ட நேரம் நிலைக்க முடியவில்லை. கோவன் 32 ரன்களையும் வாட்சன் 17 ரன்களையும் எடுத்தனர். ஹியூஸ் டக் அவுட் ஆக்கப்பட்டார். 65 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா. இதில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் அந்த அணி 101 ரன்களை எடுத்த போது வார்னரை வீழ்த்தினார் ஹர்பஜன்சிங். இந்திய அணியின் பந்துவீச்சை தொடர்ந்தும் எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்துவிட்டன. 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. இதனால் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கக் கூடிய நிலை உருவானது. இருப்பினும் ஆஸ்திரேலியா வீரர்கள் இந்தியா முன்னிலை வகித்த 192 ரன்களைக் கடந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தனர்

இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணியின் ஹென்ரிக்ஸ் 75 ரன்களுடனும், லயன் ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்களை எடுத்திருக்கிறது.

Story first published:  Monday, February 25, 2013, 11:27 [IST]
English summary
India was all out for 572 in their first innings on the fourth day of the first cricket Test against Australia here on Monday.
கருத்தை எழுதுங்கள்