Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

முதல் டெஸ்ட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Posted by:
Updated: Tuesday, February 26, 2013, 16:11 [IST]
 

முதல் டெஸ்ட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 380 ரன்கள் எடுத்தது. இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்து வீசி 7 விக்கெட்களைச் சாய்த்தார். பின்னர் ஆடிய இந்தியா புயல் வேக ஆட்டத்தால் 572 ரன்கள் குவித்தது. கேப்டன் டோணி இரட்டை சதம் அடித்தார். விராத் கோஹ்லி சதம் போட்டார்.

அடுத்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சில் சிக்கி சிதைந்தது. அஸ்வின் 5 விக்கெட்களை அள்ளினார். ரவீந்திர ஜடேஜாவுக்கு 3 விக்கெட்களும், ஹர்பஜன் சிங்குக்கு 2 விக்கெட்களும் கிடைத்தன.

இதனால் மிரண்டு போன ஆஸ்திரேலியா, எப்படியாவது இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்று போராடியது. அதன்படி அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து விட்டது. இருப்பினும் அதன் தோல்வி உறுதியாகி விட்டது. இன்று கடைசி நாளாகும்.

நேற்று ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்களை எடுத்திருந்தது. இன்று காலை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்தார் ஜடேஜா. 241 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவின் 2வது இன்னிங்ஸ் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணி 50 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது.

6 ரன்களில் முரளி விஜய் வேகமாக அவுட்டானார். பின்னர் ஷேவாக்கும், புஜாராவும் இணைந்தனர். ஷேவாக் 19 ரன்களில் ஆட்டமிழக்க, புஜாராவும், சச்சினும் இணைந்தனர். சச்சின் துரிதமாக ஆடி 13 ரன்களைச் சேர்த்தார். இறுதியில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து இந்தியா 50 ரன்களை எடுத்து முதல் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

ஆட்ட நாயகனாக இரட்டை சதம் போட்ட கேப்டன் டோணி தேர்வானார்.

Story first published:  Tuesday, February 26, 2013, 9:57 [IST]
English summary
It is just a matter of time before India claims victory over Australia in the first Test here on Tuesday. The fifth and final day's play began with Australia leading by 40 runs and one wicket in hand.
கருத்தை எழுதுங்கள்