Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஹைதராபாத் டெஸ்ட்: இந்தியா அபாரம்! முரளி விஜய், புஜாரா சதம்!! 311/1

Posted by:
Updated: Sunday, March 3, 2013, 17:00 [IST]
 

ஹைதராபாத் டெஸ்ட்: இந்தியா அபாரம்! முரளி விஜய், புஜாரா சதம்!! 311/1
 

ஹைதராபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்துள்ளது. முரளி விஜய் 129 ரன்களுடனும் புஜாரா 162 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஹைதராபாத்தில் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. போட்டியின் முதல் நாளிலேயே 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 237 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியில் கேப்டன் கிளார்க் அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியாவின் புவனேஷ்குமார், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது.

இந்திய அணி இன்று 2-வது நாளாக தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. தொடக்கத்திலேயே இந்திய அணி சேவாக் விக்கெட்டை பறிகொடுத்தது. இந்திய அணி 17 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க வீரரான முரளி விஜய்யுடன் புஜரா இணைந்தார். சென்னை டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறிய முரளி விஜய் இம்முறை நிதானமாக ஆடி சதத்தைக் கடந்திருக்கிறார். டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் அடித்திருக்கும் 2-வது சதம். இந்த 2 சதங்களையுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவே அடித்திருக்கிறார். இதேபோல் புஜாராவும் சதமடித்து அபாரத்தை வெளிப்படுத்தினார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களைக் குவித்திருக்கிறது. இந்தியாவின் புஜாரா 162 ரன்களுடனும் முரளி விஜய் 129 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணியைவிட 74 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது இந்தியா. இந்தியா வசம் 9 விக்கெட்டுகள் இருக்கின்றன.

Story first published:  Sunday, March 3, 2013, 13:37 [IST]
English summary
Murali Vijay scored his third Test fifty as India continued to pick up their run rate in Hyderabad Test.
கருத்தை எழுதுங்கள்