Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஹைதராபாத் டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள்! 266 ரன்கள் முன்னிலை!!

Posted by:
Updated: Monday, March 4, 2013, 14:31 [IST]
 

ஹைதராபாத் டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள்! 266 ரன்கள் முன்னிலை!!
 

ஹைதராபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவை விட 266 ரன்கள் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.

ஹைதராபாத்தில் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. போட்டியின் முதல் நாளிலேயே 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 237 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. நேற்று முன் தினம் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது. இந்திய அணி நேற்று 2-வது நாளாக தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. தொடக்கத்திலேயே இந்திய அணி சேவாக் விக்கெட்டை பறிகொடுத்தது. இந்திய அணி 17 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க வீரரான முரளி விஜய்யுடன் புஜரா இணைந்தார். முரளி விஜய்- புஜாரா ஜோடி நேற்று அபாரமாக ஆடி இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். இருவரும் நேற்று சதமடித்திருந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களைக் குவித்திருந்தது. புஜாரா 162 ரன்களுடனும் முரளி விஜய் 129 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டத்தை முரளி விஜய்யும் புஜராவும் தொடர்ந்தனர். புஜரா இரட்டை சதத்தைக் கடந்திருக்கிறார். 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் புஜாராவின் 2-வது இரட்டை சதம் இது.

முன்னதாக 187 ரன்களை புஜரா கடந்த போது டெஸ்ட் போட்டிகளில் அவர் 1000-வது ரன்னை எட்டினார். 25 வயதாகும் புஜாரா 18 இன்னிங்ஸில் விளையாடி 1000 ரன்கள் எட்டியிருக்கிறார்.

இந்தியாவின் முரளி விஜய்யும் 167 ரன்கள் எடுத்த நிலையில் இரட்டை சதத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அவர் இந்திய அணி 387 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து 204 ரன்கள் எடுத்த நிலையில் புஜாராவும் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 393 ரன்கள் எடுத்தது. புஜரா, முரளி விஜய் வெளியேறிய நிலையில் களத்தில் டெண்டுல்கரும் கோஹ்லியும் இருந்தனர். கடந்த போட்டியில் 81 ரன்கள் வரை எடுத்திருந்த டெண்டுல்கர் இன்று 7 ரன்களிலேயே அவுட் ஆனார். கோஹ்லியுடன் கேப்டன் டோணி இணைந்தார். டோணி 44 ரன்களிலும் கோஹ்லி 34 ரன்களிலும் அவுட் ஆயினர். கோஹ்லி அவுட் ஆன போது இந்திய அணியின் ஸ்கோர் 460 ஆக இருந்தது.

பின்னர் ஆடிய பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆயினர். ஹர்பஜன்சிங் ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட் ஆனார். இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் 503 ரன்களில் இழந்தது.

ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணி 266 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் இருக்கிறது.

Story first published:  Monday, March 4, 2013, 11:46 [IST]
English summary
Opener Murali Vijay (167) and Cheteshwar Pujara (204) decimated the Australian attack with scintillating high runs as India.
கருத்தை எழுதுங்கள்