Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மொகாலி டெஸ்ட்: ஆஸி. 7 விக்கெட்களை இழந்து 273 ரன்கள்

Posted by:
Updated: Friday, March 15, 2013, 17:00 [IST]
 

மொகாலி டெஸ்ட்: ஆஸி. 7 விக்கெட்களை இழந்து 273 ரன்கள்
 

மொகாலி: மொகாலியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆரம்பத்திலிருந்து நிதானமாக ஆடிய ஆஸ்திரேலியா அணி இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வேகமாக விக்கெட்களைப் பறி கொடுத்தது.

2ம் நாள் ஆட்ட நேர இறுதியில் தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை அது எடுத்திருந்தது.

மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டித் தொடரில் சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், ஹைதராபாத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 135 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

இரு அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி மொகாலியில் நேற்று காலை நடைபெற இருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து காலநிலை சாதகமாக இருந்ததால் இன்று காலை டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கோவன்னும் வார்னரும் களமிறங்கினர்.

முந்தைய 2 போட்டிகளைப் போல் இல்லாமல் இன்று ஆஸ்திரேலியா அணி மிக நிதானமாக ஆடியது. ஆரம்பத்தில் விக்கெட் இழக்காமல் நிதானமாக ஆடி வந்த நிலையில் பின்னர் சடசடவென விக்கெட்கள் விழுந்தன.

தொடக்க ஆட்டக்காரர்கள் எட்கோவன் நிதானமாக ஆடி 86 ரன்களையும், வார்னர் 71 ரன்களையும் எடுத்தனர். ஆனால் பின்னர் வந்தவர்கள் சரியாக ஆடவில்லை.

கேப்டன் கிளார்க் டக் அவுட் ஆனார். ஹியூக்ஸ் 2 ரன்களையும், ஹாடின் 21 ரன்களைச் சேர்த்தார். ஸ்மித் ஆட்டமிழக்காமல் 58 ரன்களுடனும், ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Story first published:  Friday, March 15, 2013, 9:28 [IST]
English summary
Australia captain Michael Clarke won the toss and elected to bat first in the third Test at Mohali.
கருத்தை எழுதுங்கள்