Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெல்லியில் இறுதி டெஸ்ட் போட்டி: முதல் நாளில் திணறிய ஆஸ்திரேலியா- 231/8

Posted by:
Updated: Friday, March 22, 2013, 17:48 [IST]
 

டெல்லியில் இறுதி டெஸ்ட் போட்டி: முதல் நாளில் திணறிய ஆஸ்திரேலியா- 231/8
 

டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் இறுதி டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருக்கிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கெனவே கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில் இறுதி டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு வாட்சன் கேப்டனாக பொறுப்பு வகித்தார். டாஸ் வென்ற அவர் ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்வதாகக் கூறினார். தொடக்க வீரர்களாக கோவன்னும் வார்னரும் களமிறங்கினர். தொடக்கமே ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. 1.4 ஓவரில் அந்த அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் வார்னர் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ஹியூக்ஸ் இணைந்து கொண்டார். கோவன்னும் ஹியூக்ஸூம் நிதானமாக ஆடினர். ஆனால் இந்த நிதானம் 20 ஓவர்கள் வரைதான் தாக்குப் பிடித்தது. ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் எடுத்த நிலையில் ஹியூக்ஸ் அவுட் ஆனார். அவர் 45 ரன்களை எடுத்திருந்தார். இதன் பின்னர் ஆட வந்த ஆஸ்திரேலியா வீரர்களை இந்திய பந்து வீச்சாளர்கள் பதம் பார்த்து வெளியேற்றினர். கேப்டன் வாட்சன் 17, ஸ்மித் 13 ரன்களிலும் அவுட் ஆகினர். 129 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா பறிகொடுத்து திணறியது. பின்னர் ஒருவழியாக போராடி 200 ரன்களைக் கடந்திருக்கிறது. இன்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருக்கிறது. சிடில் 47 ரன்களுடனும் பேட்டின்சன் 11 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருக்கின்றனர்.

இந்தியாவின் பந்துவீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 54 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எந்த ஒரு போட்டியிலும் இந்தியா தோற்றதில்லை. தற்போதும் அப்படியே நடக்கக் கூடும் என்ற வகையில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. டெல்லி டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வென்று ஆஸ்திரேலியாவை வாஷ் அவுட் ஆக்கினால் 81 ஆண்டுகாலத்துக்குப் பிந்தைய சாதனையாக இருக்கும்.

Story first published:  Friday, March 22, 2013, 9:36 [IST]
English summary
Australia won the toss and elected to bat in the fourth and final cricket Test against India on Friday
கருத்தை எழுதுங்கள்