Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பாதுகாப்பு கட்டணத்துக்காக ஐபிஎல் சங்க சொத்துகளை ஜப்தி செய்யலாம்: மும்பை ஹைகோர்ட்

Posted by:
Updated: Wednesday, April 3, 2013, 10:30 [IST]
 

பாதுகாப்பு கட்டணத்துக்காக ஐபிஎல் சங்க சொத்துகளை ஜப்தி செய்யலாம்: மும்பை ஹைகோர்ட்
 

மும்பை: ஐ.பி.எல். போட்டிக்கான பாதுகாப்பு கட்டணத்தை செலுத்த தவறினால் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் சங்கங்களின் சொத்துக்களை மகாராஷ்டிரா அரசு ஜப்தி செய்து கொள்ளலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கு என்ன?

மும்பை உயர்நீதிமன்றத்தில் சந்தோஷ் பச்லாக் என்பவர் தாக்கல் செய்த பொது நலன் மனுவில், 2010-11-ம் ஆண்டில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியதற்காக மகாராஷ்டிரா அரசுக்கு ரூ.9 கோடி கட்டணத்தை ஐபிஎல் கிரிக்கெட் சங்கங்கள் இதுவரை செலுத்தவில்லை. இதனால் இந்த நிலுவை தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

உயர்நீதிமன்றம் அதிரடி

இம்மனுவை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஏ.பி.பாங்கலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையின் முடிவில், ஐ.பி.எல். போட்டிகளுக்கான பாதுகாப்பு கட்டணத்தை செலுத்தாத கிரிக்கெட் சங்கங்கள், வரும் 18-ந் தேதிக்குள் அந்த தொகையை அரசுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கட்டணத்தை செலுத்தாவிட்டால் சட்டப்படி நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி அரசு பரிசீலிக்கலாம். அவர்களின் சொத்துக்களை அரசு ஜப்தி செய்வதற்கு சட்டம் அனுமதிக்கிறது என்று அதிரடியாக உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

இதேபோல் ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்களை ஏலத்தில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி லோக் மஞ்ச் என்ற நிறுவனத்தின் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், மனிதர்களை ஏலத்தில் விடுவது கொடுமையானது. மனித உரிமைகள் குறித்த சர்வதேச சட்டத்தை மீறியது. இதனால் விளையாட்டு வீரர்களை ஏலத்தில் விடுவதை நிறுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது..இம் மனு மீது வரும் 25-ந் தேதி விசாரணை நடைபெறும்.

ஐபிஎல் 6-வது தொடர் தொடங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து சிக்கல்களை ஐபிஎல் போட்டிகள் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Read more about: ipl 6, security, ஐபிஎல் 6
Story first published:  Wednesday, April 3, 2013, 10:22 [IST]
English summary
The Bombay High Court has warned various state cricket associations, which have notched up arrears to the police for providing security during IPL matches, of legal action if they failed to pay the dues by April 18.
கருத்தை எழுதுங்கள்