Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: முதல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி!

Posted by:
Updated: Thursday, April 4, 2013, 9:22 [IST]
 

ஐபிஎல் 6: முதல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி!
 

கொல்கத்தா: ஐபிஎல் 6-வது தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது.

கொல்கத்தாவில் நேற்று இரவு ஐபிஎல் 6வது தொடரின் முதல் லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ. பிரெட் லீயின் பந்துக்கு அவுட் ஆனவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் நம்பிக்கைக்குரியவராக எதிர்பார்க்கப்பட்ட உன்முக்த் சந்த்.. இத் தொடரின் முதல் விக்கெட்டை முதல் பந்திலேயே பெற்ற உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார் பிரெட் லீ.

பின்னர் வார்னருடன், கேப்டன் ஜெயவர்த்தனே இணைந்து கலக்கினர். 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசிய வார்னர் 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த ஜுனேஜா 8 ரன்களிலும், ஓஜா 9 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய போத்தா 7 ரன்களிலும் பதான் 4 ரன்களிலும் ரஸல் 4 ரன்களிலும் அவுட் ஆகி பலத்த ஏமாற்றத்தை அளித்தனர். ஆனால் கேப்டன் ஜெயவர்த்தனே சற்று பொறுமையாகவே ஆடி 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டம் இழந்த போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்கோர் 125. கடைசி 2 பந்துகளில் ஆஷிஷ் நெஹ்ரா டக் அவுட் ஆனார். நதீம் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 128 ரன்களில் சுருண்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிரெட் லீ, பாட்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பாலாஜி ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர்.


129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி தொடக்க ஆட்டகாரர் பிஸ்லா 4 ரன்னில் நெஹ்ரா பந்தில் அவுட் ஆனார். காம்பீருடன் ஜோடி சேர்ந்த கல்லீஸ் அதிரடியாக விளையாடினார்கள். காம்பீர் 29 பந்தில் 42 ரன் எடுத்த நிலையில் போதா பந்தில் அவுட் ஆனார். கல்லீஸ் 23 ரன்களிலும் திவாரி 23 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் நதீம் வீழ்த்தினார். இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பதான் 18 ரன்களிலும், மோர்கன் 14 ரன்களிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டெல்லி அணியில் நதீம் 2 விக்கெட்டுகளையும், நெஹ்ரா மற்றும் போதா தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். நேற்றைய முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது நரைனுக்கு வழங்கப்பட்டது.

Story first published:  Thursday, April 4, 2013, 8:24 [IST]
English summary
Kolkata Knight Riders started their title defence on a confident note as they comfortably defeated Delhi Daredevils by six wickets in the opening encounter of the sixth edition of Indian Premier League.
கருத்தை எழுதுங்கள்