Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பிரில்லியன்ட் கோஹ்லி.... ஹைதராபாத்தை ஸ்டைலாக வீழ்த்திய பெங்களூர்!

Posted by:
Published: Wednesday, April 10, 2013, 9:11 [IST]
 

பிரில்லியன்ட் கோஹ்லி.... ஹைதராபாத்தை ஸ்டைலாக வீழ்த்திய பெங்களூர்!
 

பெங்களூர்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் போட்ட மிகப் பெரிய ஸ்கோர்... கிறிஸ் கெய்ல் மீண்டும்சொதப்பல்.. ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில், விராத் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் மிகவும் அழகான வெற்றியைப் பெற்றது.

சூப்பர் ஓவரில், மிகப் பெரிய தோல்வியைத் தழுவி 2 நாட்கள்தான் ஆன நிலையில், நேற்றைய போட்டியைச் சந்தித்தது பெங்களூர். இந்தப் போட்டியிலும் கெய்ல் சொதப்பி விட்டார். இருப்பினும் கேப்டன் கோஹ்லியின் சிறப்பான மற்றும் அபாரமான ஆட்டம் காரணமாக பெங்களூர் அணி மிகப் பெரிய ஸ்கோரை வெகு நேர்த்தியாக சேஸ் செய்து வெற்றியையும் பெற்றது.

இதுவரை தோல்வியே அடையாத அணியாக நேற்றைய போட்டியில் களம் இறங்கிய சன் ரைசர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. அதன்படி பேட் செய்த அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது.

காமரூன் ஒயிட்டும், பெரேராவும் சிறப்பாக ஆடி ஹைதராபாத் அணி ரன் குவிக்க உதவினர். ஒயிட் 52 ரன்களையும், பெரேரா 40 ரன்களையும் குவித்தனர்.

இதையடுத்து 162 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்தத் தொடங்கியது பெங்களூர். தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. குறிப்பாக கெய்ல் 13 ரன்களில் ஆட்டமிழந்து விட்டார்.

இதையடுத்து கேப்டன் கோஹ்லி மீது பொறுப்பு வந்து உட்கார்ந்தது. அவரும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித் தள்ளிய அவர் படு வேகமாக வெற்றி இலக்கை நோக்கி அணியை நகர்த்த ஆரம்பித்தார்.

கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் தொய்ந்து போயிருந்த பெங்களூர் அணி அப்படியே வீறு கொண்டெழுந்து மின்னல் வேகத்தில் வெற்றி எல்லைக்குள் வந்து நின்றது. கடைசி வரை ஆட்டமே இழக்காமல் 93 ரன்களைக் குவித்து அணியை கரை சேர்த்தார் கோஹ்லி. இதில் அவர் விளாசிய பவுண்டரிகள் 11 ஆகும், 4 சிக்ஸர்களையும் விளாசினார் கோஹ்லி.

17.4 ஓவர்களிலேயே வெறும் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கைத் தொட்டு பெங்களூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது அந்த அணி.

ஆட்ட நாயகனாக விராத் கோஹ்லி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

English summary
A heart-breaking loss in a Super Over two days ago and a rare second successive failure for Chris Gayle were brushed aside as Royal Challengers Bangalore, powered by an innings of beauty and brutality by Virat Kohli (93 not out in 47 balls), coasted to a seven-wicket win over Sunrisers Hyderabad at M Chinnaswamy Stadium in Bangalore on Tuesday.
கருத்தை எழுதுங்கள்