Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பிசாசுத்தனமான ஆட்டம்.. டெல்லி டேர்டெவில்ஸை பந்தாடிய மும்பை இந்தியன்ஸ்

Posted by:
Updated: Wednesday, April 10, 2013, 10:59 [IST]
 

பிசாசுத்தனமான ஆட்டம்.. டெல்லி டேர்டெவில்ஸை பந்தாடிய மும்பை இந்தியன்ஸ்
 

மும்பை: என்ன ஒரு ஆட்டம்... இதுதான் நேற்றைய மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆட்டத்தைப் பார்த்தவர்களின் வாயிலிருந்து வந்த ஒரே வார்த்தை. மும்பை இந்தியன்ஸின் திணேஷ் கார்த்திக் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து வாங்கடே மைதானமே குஷியின் உச்சத்திற்குப் போய் விட்டது. அப்படி ஒரு அசகாய ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லியை ஆட்டிப் படைத்து விட்டார் திணேஷ்.

ஒரு ராட்சத புல்டோசரிடம் சிக்கிய எலி போல ஆகி விட்டது டெல்லியின் நிலைமை. பேட்டிங்கிலும் சரி, பந்து வீச்சிலும் சரி மும்பை பிரமாதப்படுத்தி விட்டது. பீல்டிங்கிலும் கலக்கி விட்டனர் - குறிப்பாக ரிக்கி பான்டிங் பிடித்த முதல் கேட்ச்.

என்ன ஒரு அருமையான கேட்ச்... ஹர்பஜன் வீசிய பந்தை உன்முக்த் சந்த் அடிக்க அதை ரிக்கி தனது வலது கையால் படு ரிஸ்க்கான முறையில் அட்டகாசமாக பிடித்து நிறுத்தியபோது மைதானமே மிரண்டு போய், குஷியில் அதிர்ந்து கூவியது.

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்றது. கேப்டன் ரிக்கி பான்டிங், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ரிக்கியும், சச்சினும் களம் இறங்கினர். இருவரும் நேற்றைய போட்டியில் சரியாகஆடவில்லை. குறிப்பாக ரிக்கி மிகவும் தடுமாறினார். ரன் ஏதும் எடுக்காத நிலையில் அவர் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் சச்சினும் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஜோடி சேர்ந்தனர் திணேஷ் கார்த்திக்கும், ரோஹித் சர்மாவும். இருவரும் இணைந்து பட்டாசாகப் பொறிந்து தள்ளஆரம்பித்தனர். அதிலும் திணேஷின் ஆட்டம் சிலம்பாட்டமாக இருந்தது. வந்த பந்துகளையெல்லாம் அவர் வெளுத்துக்கட்ட மைதானமே உற்சாகத்தில் மூழ்கியது.

எப்படிப் போட்டாலும் அடித்தார், யார் பந்து வீசினாலும் அடித்தார்... திணேஷின் புயல் வேக ஆட்டத்தால் மும்பையின் ரன் வேகம் படு வேகமாக எகிறியது. மறுபக்கம் அமைதியாக ஆடி வந்த ரோஹித் சர்மா, தனக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வெளுத்துக் கட்டத் தவறவில்லை. இருவரும் சேர்ந்து டெல்லி பந்து வீச்சை சின்னாபின்னமாக்கி விட்டனர்.

திணேஷ் கார்த்திக் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 86 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவர் சதமடிப்பார் என்று நினைத்திருந்த நிலையில் அவுட்டானது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

திணேஷ் போன பிறகு ரன் வேகம் சற்று குறைந்தது. இருப்பினும் ரோஹித் அதை மறுபடியும் சூடாக்கினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் 74 ரன்களைக் குவித்தார். கடைசி வரை அவர் ஆட்டமிழக்கவில்லை. இறுதியில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களைக் குவித்தது.

இதையடுத்து 210 என்ற மிகப் பெரிய இலக்கைத் துரத்தத் தொடங்கியது டெல்லி. ஆனால் முதல் பந்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தார் ரிக்கி. ஹர்பஜன் சிங் வீசிய பந்தை அடித்த உன்முக்த் சந்த்தை, படு அபாரமாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார் ரிக்கி.

சிறிது நேரத்தில் கேப்டன் மஹலா ஜெயவர்த்தனே அவுட்டாகி வெளியேறினார். இருப்பினும் டேவிட் வார்னரும், ஜுனேஜாவும் இணைந்து சரிவை தடுத்து நிறுத்தி ரன் குவிப்பில் இறங்கினர். இருவரும் இணைந்து அடித்து ஆட ஆரம்பித்ததால் சற்றே பதட்டமடைந்தது மும்பை. இருப்பினும் ஜூனேஜா 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி விட்டார். தொடர்ந்து மெண்டிஸ், இர்பான் பதான், ஜாதவ், நதீம் ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

ஒரு பக்கம் இப்படி விக்கெட் வீழ்ந்து கொண்டிருக்க மறு முனையில் டேவிட் வார்னர் தனி நபராக கடுமையாக போராடிக் கொண்டிருந்தார். அதேசமயம் அதிரடியைக் காட்டவும் அவர் தவறவில்லை. 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் மிட்சர் ஜான்சன் பந்தில் அம்பட்டி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி நேரத்தில் மார்னி மார்க்கல் அதிரடியாக ஆடினார். வெறும் 9 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸர்களை விளாசி பிரமாதப்படுத்திய அவர் 23 ரன்களைக் குவித்தார். கடைசி வரை ஆட்டமும் இழக்கவில்லை. ஆனால் காலம் கடந்து விட்டது. 9 விக்கெட்களை இழந்த டெல்லி, 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 44 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

Story first published:  Wednesday, April 10, 2013, 8:28 [IST]
English summary
Dinesh Karthik rescued Mumbai Indians from a potential batting crisis with a powerful half-century, helping Mumbai recover from a horrific start and claim a 44-run win, in the process sending Delhi Daredevils hurtling to a third consecutive loss in the Pepsi Indian Premier League 2013.
கருத்தை எழுதுங்கள்