Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 4வது தோல்வி! 3 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் வென்றது!!

Posted by:
Published: Saturday, April 13, 2013, 10:10 [IST]
 

டெல்லி : ஐபிஎல் 6-வது தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற 14வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சன் ரைசர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளிடம் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தோல்வியடைந்துள்ளது. இதனால் டெல்லியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான லீக் போட்டியில் வென்று புள்ளிகள் பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு இருந்தது.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் இருந்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இத் தொடரில் முதல் முறையாக சேவாக் களமிறங்கினார். அவருடன் வார்னர் மற்றொரு தொடக்க வீரராக இணைந்தார். ஆனால் ஸ்டெயின் வீசிய முதல் ஓவரில் 4 பந்துகளை எதிர்கொண்ட வார்னர், ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவாக், கேப்டன் ஜெயவர்த்தனே ஆகியோரும் தலா 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இஷாந்த் சர்மாவின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் ஜூனேஜா-போத்தா இருவரும் விக்கெட்டை காப்பாற்றும் முயற்சியாக நிதானமாக ஆடினர். ஆனால், போத்தா 14 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் 11-வது ஓவரில்தான் டெல்லி அணி 50 ரன்களைத் தொட்டது. ஸ்கோர் 65 ஆக இருந்தபோது ஜூனேஜா 15 ரன்களிலும், ஆறுதல் அளித்த இர்பான் பதான் 23 ரன்களிலும் அவுட் ஆகினர்.. பொறுப்புடன் ஆடிய ஜாதவ் 20 பந்துகளில் 30 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 4வது தோல்வி! 3 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் வென்றது!!
சன் ரைசர்ஸ் அணியில் ஸ்டெயின், இஷாந்த் சர்மா, பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரெட்டி மற்றும் பட்டேல் களம் இறங்கினர். ரெட்டி 1 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். அடுத்து சங்கக்காரா களம் இறங்கினார். பட்டேல் நிதானமாக விளையாடி 4 பவுண்டரிகள் அடித்து 19 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் விஹரி, சங்கக்காராவுடன் ஜோடி சேர்ந்தார். 28 ரன்கள் எடுத்த நிலையில் சங்கக்காரா அவுட் ஆனார். விஹரி 17 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் சன் ரைசர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வீழ்த்தியது.

டெல்லி அணி தரப்பில் மோர்கல் மற்றும் நதீம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். பதான் மற்றும் பொதா தலா 1 விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது மிஸ்ராவுக்கு வழங்கப்பட்டது.

நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4-வது முறையாக தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

English summary
There was no end to Delhi Daredevils' misery as the side crashed to its fourth successive defeat in the Pepsi Indian Premier League, losing a low-scoring see-saw contest by three wickets to Sunrisers Hyderabad, here on Friday
கருத்தை எழுதுங்கள்