Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: கடைசிவரை பரபரப்பு.... 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி!

Posted by:
Updated: Sunday, April 14, 2013, 0:02 [IST]
 

ஐபிஎல் 6: கடைசிவரை பரபரப்பு.... 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி!
 

சென்னை: ஐபிஎல் 6வது தொடரில் சென்னையில் இன்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் கடைசி வரை போராடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

4 ரன்களில்கெயில் அவுட்

சென்னையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பெங்களூர் அணியின் கெய்லும் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சென்னை அணியின் நன்னெஸ் முதல் ஓவரை வீசினார். வழக்கமாக அதிரடி ரன்களைக் குவிக்கும் கெய்ல் நன்னெஸ் பந்தில் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறினார். 2-வது ஓவரை எதிர்கொண்ட போது 4 ரன்கள் எடுத்திருந்த கெயில் மோரிஸ் பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

நிலையான ஆட்டம்

பின்னர் அகர்வாலுடன் கை கோர்த்த கேப்டன் விராத் கோஹ்லி நிலைத்து ஆடி ரன்கள் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த அணி 9வது ஓவரில் 50 ரன்களை எடுத்த போது அகர்வால் அவுட் ஆனார். அவர் 21 பந்துகளில் 24 ரன்களை எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும். அகர்வால் வெளியேறியதைத் தொடர்ந்து கோஹ்லியுடன் டிவில்லர்ஸ் இணைந்தார். 10 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 64 ரன்களை எடுத்தது. 13வது ஓவர் முடிவில் கோஹ லி 37 பந்துகளில் 42 ரன்களுடன் அரை சதத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். 14-வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்களை எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. 6 ஓவர்கள் இருக்கும் நிலையில் விக்கெட்டுகளும் கைவசம் இருப்பதால் அந்த அணி இனி அதிரடியாக ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

15வது ஓவரின் முதல் பந்தில் 100 ரன்களைத் தாண்டியது பெங்களூர் அணி. எதிர்பார்க்கப்பட்டத போல அடுத்தடுத்து நன்னெஸ் பந்துகளை பவுண்டரிக்கு கிளப்பி அதிரடி கிளப்பினார் டிவில்லெர்ஸ். இதே ஓவரின் 4வது பந்தும் பவுண்டரிக்கு போக எல்லையிலேயே தடுக்கப்பட்டுவிட்டது. 3 ரன்கள் எடுக்க முடிந்தது. இந்த ஒரு ஓவரில் மட்டும் நோபால் உட்பட மொத்தம் 16 ரன்களை சேர்த்தது பெங்களூர் அணி. 15வது ஓவர் முடிவில் 115 என்ற வலுவான நிலையில் இருந்தது பெங்களூர் அணி. 16வது ஓவரின் முடிவில் கோஹ்லி ஒரு ரன அடித்து அரை சதம் அடித்தார். 16வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் என்ற நல்ல ஸ்கோருடன் இருந்தது பெங்களூர் அணி.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ச்சி

17வது ஓவரில் மோரிஸ் வீசிய பந்தில் 58 ரன்கள் எடுத்திருந்த கோஹ்லி அவுட் ஆனார். அவர் 47 பந்துகளில் 58 ரன்களை எடுத்தார். இதில் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். அப்போது அந்த அணி 133 ரன்களை எடுத்திருந்தது. கோஹ்லி வெளிய றியதைத் தொடர்ந்து டிவில்லர்ஸுடன் கிறிஸ்டெய்ன் இணைந்தார். அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் அதே ஓவரில் அவுட் ஆனார். மோரிஸ் வீசிய 17வது ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன. 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை பெங்களூர் அணி எடுத்தது. டிவில்லர்ஸுடன் ரவி ராம்பால் இணைந்தார் இவர் 4 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன்னும் எடுக்காமல் அவுட் ஆனார். 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் என்ற நிலையில் இருந்தத பெங்களூர் அணி. 19வது ஓவரில் இந்த நிலைமை டிவில்லர்ஸ் மாற்றினார். 19வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது. டிவில்லர்ஸ் 30 பந்துகளில் 60 ரன்களை விறுவிறுவென எட்டினார். 20 ஓவரின் கடைசி பந்தில்டிவில்லர்ஸ் அவுட் ஆனார். 20வது ஓவரின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 165 ரன்களை எடுத்தது. சென்னை அணி வெற்றி பெற 166 ரன்கள் எடுக்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி

இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டத்தைத் தொடங்கியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும் மைக் ஹசியும் இறங்கினர். பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தைப் போலவே நிதானமான தொடக்கத்தை இருவரும் வெளிப்படுத்தினர். 3வது ஓவரை ராம்பால் வீசினார். அவரது முதல் பந்தில் முரளி விஜய் அவுட் ஆனார். அவர் 5 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பின்னர் ரெய்னா, மைக் ஹசியுடன் இணைந்தார். ஆனால் ஹசி 4வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரெய்னாவுடன் பத்ரிநாத் கைகோர்த்தார்.

ரெய்னா- பத்ரியின் பொறுப்பான ஆட்டம்

சோர்ந்து போயிருந்த சென்னை ரசிகர்களை 5வது ஓவரில் முதல் பவுண்டரி அடித்து உற்சாகப்படுத்தினார் ரெய்னா.5வது ஓவர் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்களை எடுத்தது.அப்போது 90 பந்துகளில்149 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. 6வது ஓவரின் வினய்குமார் வீசிய முதல் பந்தில் இன்னொரு பவுண்டரியை பறக்கவிட்டார் ரெய்னா. 3வது பந்தில் பத்ரிநாத் அழகாக தூக்கி அடித்த பந்து ஆர்.பி.சிங் கையில் பட்டு தவறிப் போனதால் சென்னை ரசிகர்கள் பெருமூச்சுவிட்டனர். அடுத்த பந்தை ரெய்னா எதிர்கொண்டு மீண்டும் பவுண்டரிக்கு அனுப்பினார். அதற்கடுத்த பந்தையும் ரெய்னா பவுண்டரிக்கு அனுப்ப சென்னை அணியின் ஸ்கோர் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் உயர்ந்தது. 6வது ஓவர் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை எடுத்தது.. 6வது ஓவரில் மட்டும் 14 ரன்களை எடுத்தது சென்னை அணி. இதில் 3 பவுண்டரிகள் அடங்கும்.

7வது ஓவரை கிறிஸ்டெய்ன் வீசினார். இந்த ஓவரில் பத்ரிநாத்தும் தம் பங்குக்கு ஒரு பவுண்டரியை விளாசினார். இந்த ஓவரில் சென்னை அணி 6 ரன்கள் எடுத்தது. 8வது ஓவரில் 5வது பந்தில் கார்த்திக் வீசிய பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் பத்ரிநாத். கடைசி பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி வைக்க முயற்சித்தார் பத்ரிநாத். ஆனால் பவுண்டரி லைனில் தடுக்கப்பட்டால் 2 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. 8வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்களை சென்னை அணி எடுத்தது. சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் 22 ரன்களையும், பத்ரிநாத் 12 பந்துகளில்14 ரன்களையும் எடுத்திருந்தனர்.

ரெய்னா- பத்ரி அவுட்

9 வது ஓவரில் மொஹம்மது வீசிய முதல் பந்தை ரெய்னா அற்புதமாக பவுண்டரிக்கு லைனுக்கு அனுப்ப சென்னை அணி 50 ரன்களைத் தொட்ட்டது. இந்த ஓவரின் முடிவில் 54 ரன்களை சென்ன அணி எடுத்தது. 10வது ஓவரை கார்த்திக் வீசினார். முதல் பந்திலேயே பத்ரிநாத் அதை பவுண்டரிக்கு அனுப்பிவிட்டார். 3வது பந்தில் 2 ரன்கள் எடுக்க ரெய்னா- பத்ரிநாத் ஜோடி மட்டும் 50 ரன்களை எட்டியது. 10வது ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ரன்கள் எடுத்து 60 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. 11வது ஓவரை மொஹம்மது வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தை ரெய்னா தூக்கி அடிக்க கார்த்திக் கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். ரெய்னா 22பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்களை எடுத்தார். சென்ன இஅணி 66ரன்கள் எடுத்திருந்தது. இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். களத்தில் இருந்த பத்ரிநாத்துடன் கேப்டன் டோணி கை கோர்த்தார். பொறுப்பாக விளையாடிய பத்ரிநாத் மொஹம்மது வீசிய பந்தை தூக்கி அடிக்க அது அகர்வாலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட் ஆனார். சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.


டோணி- ஜடேஜா ஜோடி பொறுப்பான ஆட்டம்

இந்த நிலையில் கேப்டன் டோணி பொறுப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவானது. டோணியுடன் ஜடேஜா இணைந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே 14வது ஓவரின் 3வது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் டோணி. இந்த ஓவரின் முடிவில் 95 ரன்களை எடுத்த சென்னை அணி 36 பந்துகளில் 71ரன்களை எடுகக் வேண்டிய நிலை இருந்தது. வழக்கம் போல சென்னை சூப்பர்கிங்ஸின் கடைசி நேர பரபரப்பு இன்றைய போட்டியிலும் எதிரொலித்தது.


15வது ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜா 2 ரன்களை அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 101ரன்களைத் தொட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 15ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி வசம் விக்கெட்டுகள் இருந்தாலும் ஓவர்கள் மிகக் குறைவாக இருப்பதால் செனனை ரசிகர்கள் ஒருவித பதட்டத்துடன் இருந்தனர். 16வது ஓவரின் 4-வது பந்தில் ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு அனுப்ப மிக அற்புதமாக அகர்வால் அதை எல்லைக் கோட்டில் தடுத்தார். அதனால் அவர் கையில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார். 16வது ஓவரின் கடைசி பந்தை ஜடேஜா லாவகமாக பவுண்டரிக்கு அனுப்பினார். சென்னை அணி 24 பந்துகளில் 54 ரன்களை எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

17வது ஓவரை அடித்து ஆடியாக வேண்டும் என்ற முடிவில் டோணி விளையாடியதாகவே தோன்றியது. ராம்பால் வீசிய முதல் பந்தில் ஒரு பவுண்டரி, அடுத்த பந்தில் சிக்சர் அடித்தார். சிக்சர் அடித்த உயரத்தை பார்த்தால் அனேகமாக மெரினா கடற்கரை பக்கம் போய் விழுந்திருக்க வேண்டும். அடுத்த பந்தில் அதிரடியாக 2 ரன்களை விளாசினார். இதனால் சென்னை 21 பந்துகளில் 42 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது. 17வது ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை எடுத்திருந்தது. 18 பந்தில் 41 ரன்கள் எடுத்தாக வேண்டும் என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கடைசி பரபரப்பான 3 ஓவர்கள்

18வது ஓவரை வினய்குமார் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு தட்டிவிட்டார். அடுத்த பந்தில் ஜடேஜா 2 ரன்களை எடுத்தார். அப்போது டோணி-ஜடேஜா ஜோடி மட்டும் 55 ரன்களைக் குவித்திருந்தது. 18வது ஓவரின் முடிவில் 137 ரன்களை சென்னை சூப்பர்கிங்ஸ் எடுத்தது.12 பந்துகளில் 29 ரன்களை எடுத்தால்தான் சென்னை அணி வெற்றி பெற முடியும். வழக்கமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடைசி ஓவர் அல்லது கடைசி பந்தில் வெற்றி பெறுவதை வாடிக்கையாக வைத்திருப்பதால் விக்கெட்டுகளும் கைவசம் இருக்கும் நிலையில் சென்னை அணி எப்படியும் வென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இருப்பினும் சென்னை அணியின் வழக்கமான இந்த பார்முலா உடைத்தாக வேண்டும் என்ற வேகம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இருந்தது.

டோணி அவுட்டால் டென்ஷன்

இதனால் கடைசி 2 ஓவர்கள் பரபரப்பானவையாக இருந்தன. 19வது ஓவர் தொடங்குவதற்கு முன்பாக டோணிக்கு ஏதோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அருகில் இருந்த கெய்ல், பெவிலியனில் ரெஸ்ட் எடுக்கலாமே என்று ஜோக்கடித்தார். இதை நிஜமாக்கும் வகையில் 19வது ஓவரின் முதல் பந்தில் டோணி அவுட் ஆகி வெளியேறி விட சென்னை ரசிகர்கள் அப்செட் ஆகினர்.. 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் என்ற நெருக்கடியான நிலையில் இருந்தது சென்னை அணி. அப்போது களத்துக்கு வந்த பிராவோ ராம்பாலின் 2-வது பந்தை அற்புதமாக சிக்சருக்கு அனுப்ப அப்பாடா என்று சென்னை ரசிகர்கள் பெருமூச்சுவிட்டனர். 10 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. 3வது பந்தை சிக்சருக்கு தூக்க ஆனால் அது பவுண்டரி லைனில் தடுக்கப்பட்டுவிட்டது. இதனால் மைதானத்தில் டென்ஷன் உச்சகட்டமானது.

[ஸ்கோர்போர்டு]

இந்த டென்ஷனில் பிராவோ அவுட் ஆகி வெளியேற மைதானமே ஒட்டுமொத்த அப்செட் ஆனது. சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்திருந்தது. 8 பந்தில் 20 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற இக்கட்டான நிலையில் இருந்தது சென்னை அணி. இதைத் தொடர்ந்து ஜடேஜாவுடன் மோரிஸ் இணைந்தார். அவர் எதிர்கொண்ட முதல் பந்தில் 2 ரன்களை எடுத்தார். அடுத்த பந்தில் மேலும் 2 ரன்கள் எடுக்க சென்னை அணி 150 ரன்களைத் தொட்டது. கடைசி ஓவரில் 16 ரன்களை எடுத்தால்தான் வெற்றி என்ற நிலை இருந்தது.

கடைசி ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ஜடேஜா.5 பந்தில் 12 ரன்கள் என்ற நிலை வந்தது. அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்க சென்னை ரசிகர்கள் ஆராவாரத்தில் துள்ளிக் குதித்தனர். 4 பந்தில் 6 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது. இதனால் சென்னை அணியின் வெற்றி உறுதியானது. மூன்றாவது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 3 பந்தில் 5 ரன்கள் என்ற பரபரப்பான தருணம் அது... கடைசி ஓவரி 5வது பந்தில் ஜடேஜா தூக்கி அடித்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டது . அதற்குள் 2 ரன்கள் எடுத்த நிலையில் அது நோபால் என அறிவிக்கப்பட 166 ரன்களை எட்டி சென்னை அணி வழக்கம் போல த்ரில் வெற்றியை பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை சுவைத்தது!

Story first published:  Saturday, April 13, 2013, 10:23 [IST]
English summary
Chennai have won the toss and elected to field in chennai match.
கருத்தை எழுதுங்கள்