Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

Posted by:
Updated: Thursday, April 25, 2013, 9:31 [IST]
 

கொல்கத்தா: ஐபிஎல் 6வது தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. நேற்று பிறந்த நாள் கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர் 2 ரன்களில் அவுட் ஆனாலும் அவர் இடம்பெற்ற மும்பை அணி வெற்றி பெற்றது அவருக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசாகும்.

ஒரே ஓவரில் 3 பவுண்டரி- ஒரு சிக்சர்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணியின் யூசுப் பதானும் கவுதம் காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்பஜன் சிங் முதல் ஓவரை வீசினார். யூசுப் பதானும் காம்பீரும் அவரது பந்துகளை வெளு வெளுவென வெளுத்துக் கட்டிவிட்டனர். முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார் பதான். 4வது பந்தில் ஒரு சிக்சரை வெளுத்தார் அவர். 5வது பந்தில் காம்பீர் தம் பங்குக்கு ஒரு சிக்சர் அடித்து துவைக்க முதல் ஓவரில் மட்டும் 26 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி அதிர்ச்சியில் உறைந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

2வது ஓவரின் முதல் பந்தை ஜான்சன் வீச அது ஹர்பஜன்சிங் கைகளில் கேட்ச் ஆனது. 6 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள்,1 சிக்சருடன் 19 ரன்கள் எடுத்திருந்தார் யூசுப் பதான். இந்த 2வது ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் 2வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்ற அட்டகாச நிலையில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. காம்பீருடன் காலிஸ் இணைந்து கொண்டார். 3வது ஓவரை ஹர்ஜபன் வீசவில்லை. அவருக்குப் பதிலாக மலிங்கா வீசினார். இந்த ஓவரிலும் 10 ரன்கள் எடுத்து அபாரத்தைக் காட்டியது கொல்கத்தா அணி.

போகப் போக வேகம் குறைந்த கொல்கத்தா

ஆனால் 4வது ஓவரில் கொல்கத்தா அணியின் வேகத்தை ஜான்சன் கட்டுப்படுத்தினார். அவரது ஓவரில் 2 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. 5வது ஓவரை மலிங்கா வீச இந்த ஓவரில் 6 ரன்கள் கூடுதலாக எடுத்தது கொல்கத்தா. இந்நிலையில் 8வது ஓவரை ஓஜா வீசினார். அந்த ஓவரில் காம்பீர் அடித்த பந்தை மீண்டும் ஹர்பஜன்சிங்கே கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். 20 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்களை எடுத்திருந்தார் காம்பீர். பின்னர் மனோஜ் திவாரி காலிஸுடன் இணைந்தார். காலிஸ் ரன்களைக் குவித்துக் கொண்டிருந்த நிலையில் 12வது ஓவரில் ஓஜா பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 38 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளை அடித்து 37 ரன்களை எடுத்திருந்தார் காலிஸ். தொடக்கத்தில் இருந்த ரன்குவிப்பு வேகம் அப்படியே கொல்கத்தா அணியிடம் குறைந்து போனது. 20 வது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

2 ரன்களில் டெண்டுல்கர் அவுட்

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ். அந்த அணியின் ஸ்மித்தும் பிறந்தநாள் நாயகனுமாகிய சச்சின் டெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். முதல் 4 ஓவர்களில் ஸ்மித் நிதானமாக ரன்களைக் குவித்திருந்தார். 4வது ஓவரில் மட்டும் அப்துல்லாவின் பந்தில் 2 அபார சிக்சர்களை அடித்தார் ஸ்மித். அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் குவிக்கப்பட்டன. 5வது ஓவரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். பிறந்த நாள் நாயகன் சச்சின் இன்று எப்படி ஆடுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த ஓவரை நரைன் வீசினார். இந்த ஓவரில் நரைன் பந்தில் நடு ஸ்டம்ப் நச்சென தெறிக்க டெண்டுல்கர் 6 பந்துகளில் 2 ரன் எடுத்த நிலையுடன் அவுட் ஆனார்.

ஸ்மித்துடன் தினேஷ் கார்த்திக் இணைந்தார். ஆனால் அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மும்பை அணியின் ஸ்கோர் 65 ஆக இருந்த போது 8வது ஓவரில் அவர் அவுட் ஆனார். 6 பந்துகளில் ஒரு பவுண்டரி அடித்து 7 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். ஸ்மித்துடன் ரோஹித் சர்மா இணைந்தார். களத்தில் நிலைத்து நின்று அரை சதத்தைக் கடந்து 63 ரன்களை ஸ்மித் எடுத்திருந்த நிலையில் நரைனின் பந்தில் ஸ்மித் அவுட் ஆனார். அவர் 45 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 62 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் பொல்லார்டு பேட்டிங்கில் இணைந்தார். 15வது ஓவர் முடிவில் 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில் இருந்தது மும்பை இந்தியன்ஸ். இதனால் கடைசி ஓவர்கள் வழக்கம் போல பரபரப்பாயின.

கடைசி ஓவர் -- பரபரப்பான வெற்றி

இந்த பரபரப்பில் 17வது ஓவரில் சர்மாவின் விக்கெட்டை நரைன் சாய்த்தார். அவர் 28 பந்துகளில்2 சிக்சர், 1 பவுண்டரியுடன் 34 ரன்களை எடுத்திருந்தார். இப்போது பொல்லார்டுவுடன் அம்பாத்தி ராயுடு இணைந்து கொண்டார். கடைசி ஓவரில் 10 ரன்களை எடுத்தாக டென்சன் நிலை...கொல்கத்தாவின் பாட்டியா பந்து வீசினார்.

20வது ஓவரின் முதல் பந்தில் பொல்லார்டு அவுட் ஆனார். அவர் 24 பந்துகளில் 33 ரன்களை எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகள்,1 சிக்சர் அடங்கும். அப்போது ஹர்பஜன்சிங் அம்பாத்தி ராயுடுவுடன் இணைந்தார். 2வது பந்தில் ராயுடு 1 ரன் அடிக்க செம டென்ஷன்.... 3வது பந்தை எதிர்கொண்டவர் ஹர்பஜன்சிங்.. தொடக்க ஓவரில் ரன்களை வாரிக் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை நெருக்கடிக்கு தள்ளிவிட்டதற்கு பாவ விமோசனமாக 3வது பந்தை அற்புதமாக ஒரு சிக்சர் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு வழிகாட்டினார். கடைசி 3 பந்துகளில் 3 ரன்கள் என்ற நிலை... 4வது பந்தில் ஹர்பஜன்சிங் 1 ரன் மட்டும் அடித்தார். 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் 5வது பந்தை ராயுடு எதிர்கொண்டு அற்புதமாக பவுண்டரிக்கு விளாசிவிட வெற்றியைத் தட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி! 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது.

கொல்கத்தாவின் நைட் ரைடர்ஸ் அணியின் நரைன் 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published:  Thursday, April 25, 2013, 9:16 [IST]
English summary
Mumbai Indians achieved the 160-run target at the loss of five wickets with one ball to spare against Kolkata Knight Riders.
கருத்தை எழுதுங்கள்