Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

போராடித் தோற்றது பஞ்சாப் அணி… கடைசி பந்தில் மும்பை அணி திரில் வெற்றி

Posted by:
Published: Tuesday, April 30, 2013, 11:58 [IST]
 

மும்பை: ஐபிஎல் 6 லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசிவரை போராடியும் வெற்றி பெறமுடியாமல் தோல்வியை தழுவியது. கடைசிப் பந்தில்மும்பை இந்தியன்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

மும்பையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின.

பஞ்சாப் அணியில் கில்கிறிஸ்ட் நீக்கப்பட்டு, கேப்டன் பொறுப்பை டேவிட் ஹசி ஏற்றார். "டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, "பேட்டிங்' தேர்வு செய்தார்.

சச்சின் 9 ரன் எடுத்து பிரவீன் வேகத்தில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 25 ரன், ஸ்மித் 33 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் ரோகித் ஷர்மா , போலார்டு ஜோடி 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக 88 ரன் சேர்த்தது.

போராடித் தோற்றது பஞ்சாப் அணி… கடைசி பந்தில் மும்பை அணி திரில் வெற்றி

டேவிட் ஹசி வீசிய கடைசி ஓவரில் மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரி உட்பட 27 ரன்கள் எடுத்தார் ரோகித். ஆட்டத்தில் ரோகித் சர்மா மொத்தம் 79 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர், 6 பவுண்டரி அடக்கம், போலார்டு கடைசி வரை நின்று ஆடினர் 20 ரன் எடுத்தார்.. மும்பை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கு

அடுத்து 20 ஓவரில் 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கிங்ஸ் லெவன் அணி பேட் செய்யத் தொடங்கியது.

தத்தளித்த பஞ்சாப்

மலிங்கா வீசிய புயல் வேகப் பந்தில் மன்தீப்(9) போல்டானார். ஜான்சன் பந்தில் வோரா(1) சுருள, 2 விக்கெட்டுக்கு 16 ரன்கள் எடுத்து தத்தளித்தது பஞ்சாப் அணி.

பின் கேப்டன் டேவிட் ஹசி, ஷான் மார்ஷ் சேர்ந்து அதிரடியாக ரன் சேர்த்தனர். இவர்கள் மலிங்கா ஓவரில் 3 பவுண்டரி அடித்தனர். தொடர்ந்து தவால் குல்கர்னி ஓவரில் ஹசி 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

விக்கெட் சரிவு

இந்த நேரத்தில் ஓஜா பந்தை மார்ஷ்(10) தூக்கி அடிக்க, எல்லைக் கோடு அருகே ஒரே கையால் பறந்து போலார்டு பிடிக்க, பரிதாபமாக வெளியேறினார். சிறிது நேரத்தில் ஹசியும்(34) ஓஜா வலையில் மாட்டினார். அடுத்தடுத்து விக்கெட் விழுந்த நிலையில் மில்லர் மட்டும் நிலைத்து ஆடி 56 ரன் குவித்தார்.

திரில் வெற்றி

கடைசி 6 பந்தில் பஞ்சாப் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. குல்கர்னி பந்துவீசினார். முதல் 4 பந்தில் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 5வது பந்தில் பிரவீண் குமார் சிக்சர் அடிக்கவே அணியின் உரிமையாளர் பிரித்தீ ஜிந்தா உற்சாகமாக குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது மும்பை அணிக்கு "டென்ஷனை ஏற்படுத்தியது.

1 பந்து 5 ரன்கள் என்ற நிலையில் கடைசி பந்தையும் சிக்சருக்கு விரட்டலாம் என்று நினைத்து பிரவீண் அடிக்கவே அதனை சச்சின் லாவகமாக பிடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 4ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது.

கடைசி பந்து

பஞ்சாப் அணி 20 ஓவரில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. கடைசி நேரம் வரை ஆட்டம் விறுவிறுப்பாக சென்று உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் போக்கை அந்த கடைசி பந்துதான் தீர்மானித்தது என்றே கூறலாம். ஆட்டநாயகன் விருதை மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா வென்றார்.

English summary
Rohit Sharma-led Mumbai Indians beat Kings XI Punjab by 4 runs at the Wankhede Stadium in Mumbai on Monday as the hosts registered the sixth victory in this year's IPL .
கருத்தை எழுதுங்கள்