Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இங்கிலாந்து வீரரை அடித்த டேவிட் வார்னர் சஸ்பெண்ட்

Posted by:
Published: Thursday, June 13, 2013, 17:34 [IST]
 

இங்கிலாந்து வீரரை அடித்த டேவிட் வார்னர் சஸ்பெண்ட்
 

பிர்மிங்காம்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட்டை பாரில் வைத்துத் தாக்கி சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை, ஆஷஸ் தொடர் தொடக்கம் வரை சஸ்பெண்ட் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பான தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய்ம் டவிட்டர் தகவல் மூலம் வெளியிட்டுள்ளது.

பிர்மிங்காமில் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பாருக்குச் சென்றிருந்தபோது ஜோ ரூட்டை வம்புக்கிழுத்து முகத்தில் குத்தி விட்டார் வார்னர். இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இதையடுத்து நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வார்னர் சேர்க்கப்படவில்லை. தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி வரை டேவிட் வார்னர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவருக்கு 11,500 டாலர் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர்ந்து ஆட முடியாத நிலை வார்னருக்கு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் ஜூலை 10ம் தேதி நாட்டிங்காமில் தொடங்கும் முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார்.

1986ம் ஆண்டு பிறந்த டேவிட் வார்னர், 19 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1263 ரன்களை எடுத்துள்ளார். 39 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 1133 ரன்கள் எடுத்துள்ளார். 44 டுவென்டி 20 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் சேர்த்த ரன்கள் 1206 ஆகும்.

வார்னர் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பில் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Australia's David Warner has been suspended until the start of the Ashes series and fined after allegedly attacking England's Joe Root in a bar, Cricket Australia (CA) said on Thursday. "@davidwarner31 has been suspended up until the First Test of #TheAshes and fined $11,500," (£7,000, $11,000), the federation said on its Twitter account @CricketAus after a disciplinary hearing.
கருத்தை எழுதுங்கள்